ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது - சல்மான் குர்ஷித் தகவல்


ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது - சல்மான் குர்ஷித் தகவல்
x

காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார்.

இந்தநிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மாண்டவிய கடிதம் எழுதிருந்தார். அதில், 'பாரத் ஜோடோ யாத்ரா'வின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால், தேச நலனை கருத்தில் கொண்டு நடைப்பயணத்தை ஒத்திவையுங்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும், ஆனால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு போதும் நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனிமனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.


Next Story