காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
கருத்துக்கணிப்புகள்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (10-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இடையே பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.
சில கருத்துக்கணிப்புகள் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் பா.ஜனதா வெற்றி பெறும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன.
பா.ஜனதாவுக்கு பின்னடைவு
இந்த நிலையில் ஏ.பி.பி. மற்றும் சிஓட்டர்ஸ் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 110 முதல் 122 இடங்களும், பா.ஜனதாவுக்கு 73 முதல் 85 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 21 முதல் 29 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின் றன.
134 இடங்கள் காங்கிரசுக்கு கிடைக்கும்
அதுபோல் லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் கட்சி 129 முதல் 134 இடங்களிலும், பா.ஜனதா 59 முதல் ௬௫ இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 23 முதல் 28 இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகளுக்கு 13-ந்தேதி விடை கிடைத்து விடும்.