ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மக்கான் ராஜினாமா


ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மக்கான் ராஜினாமா
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 16 Nov 2022 10:55 PM IST (Updated: 16 Nov 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மக்கான் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மக்கன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்திருந்தார்.

அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியது. இதற்கு, அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்ததால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சி மேலிடம் அப்போதைய மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோரை அம்மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது.

ஜெய்ப்பூர் சென்ற இருவரும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை சந்திக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இந்தச் சந்திப்பை புறக்கணித்தனர். மேலும், சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய இந்த எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அஜய் மக்கான் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அஜய் மக்கான் கடந்த 8-ம் தேதி ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானுக்கு வருகிறது. எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக புதிய பொறுப்பாளரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story