ஒமைக்ரான் பிஏ.4 மாறுபாடு இந்தியாவில் கண்டறியப்பட்ட பின் கண்காணிப்பு தீவிரம் - டாக்டர் என் கே அரோரா


ஒமைக்ரான் பிஏ.4 மாறுபாடு இந்தியாவில் கண்டறியப்பட்ட பின் கண்காணிப்பு தீவிரம் - டாக்டர் என் கே அரோரா
x

இந்தியாவில் ஒமைக்ரான் துணை மாறுபாடுகள் கண்டறியப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்காணிப்பதை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மருத்துவ நிபுணர் அரோரா தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஒமைக்ரான் வைரசின் மாறுபாடுகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முதலாக கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் துணை மாறுபாடுகள் கண்டறியப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை கண்காணிப்பதை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, கொரோனா பணிக்குழு (என்டிஏஜிஐ)வின் தலைவரான டாக்டர் என் கே அரோரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் ஐதராபாத்தில் ஒமைக்ரான் துணைவேறுபாடுகள் கண்டறியப்பட்டு, மிக நெருக்கமாக பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிவது பின்பற்றப்படுகிறது. இதனை தீவிரப்படுத்தியுள்ளோம்.

ஐசிஎம்ஆர் இன் வழிகாட்டுதல்கள்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறிகுறிகள் இல்லா நோயாளிகள் அதிகரித்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிவது தீவிரப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழலில், பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிவதை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில், நோய் பாதிப்பை பற்றிய கண்காணிப்பு அரசாங்கத்தால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், திடீரென அதிக கொரோனா பாதிப்பு ஏற்படுவதையும் அல்லது புதுவகை வைரஸ் மாறுபாடுகள் சமூகத்தில் ஏற்படுகிறதா என்பனவற்றை முன்கூட்டியே நாம் கணிக்க முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்துவந்த மனிதர்கள் அல்லது கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்டு வந்த மனிதர்களிடம் தான், இப்போது பெரும்பாலான கொரோனா பாதிப்பு என்பது காணப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடமே பெரும்பாலான நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.

ஒமைக்ரான் நோய்த்தொற்றினால் ஏற்படும் நோயின் தீவிரம் மற்றும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அல்லது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. இந்த நேரத்தில் இன்னொரு கொரோனா அலை வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், கொரோனா பரவல் கட்டுக்குள் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story