தொடர் மழை: அசாமில் வெள்ளப்பெருக்கு நிலைமை மோசமடைகிறது: 43 லட்சம் பேர் பாதிப்பு


தொடர் மழை: அசாமில் வெள்ளப்பெருக்கு நிலைமை மோசமடைகிறது: 43 லட்சம் பேர் பாதிப்பு
x

அசாமில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நாகோன் மாவட்டத்தில் பாயும் கோபிலி ஆறு, காம்ரப், கவுகாத்தி, தேஜ்பூர், கோல்பாரா, திபுரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா நதி போன்ற முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்கிறது.

இதைப்போல சுபான்சிரி, புதிமாரி, பக்லாடியா, மனாஸ், பேகி பாரக், குஷியாரா போன்ற ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு தீவுக்கூட்டங்களாக மாறி உள்ளன. 33 மாவட்டங்களில் 5,137 கிராமங்கள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாசர், திமா-ஹசாவோ, கால்பாரா, கைலாண்டி, காம்ரப், கரிம்கஞ்ச் போன்ற மாவட்டங்களில் நேற்று காலை வரையிலான முந்தைய 24 மணி நேரத்திலும் நிலச்சரிவு சம்பங்கள் ஏற்பட்டன. இந்த தொடர் மழையும், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையும், வெள்ளப்பெருக்கும் தொடர்ந்து மோசமடைவதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளச்சேதம் அதிகமான பகுதிகளில் வசித்து வரும் 1.90 லட்சம் பேர் சுமார் 750 நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதைப்போல வெள்ளத்தில் சிக்கிய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அசாமின் காசிரங்கா உயிரியல் பூங்காவில் சிறுத்தை உள்பட 8 விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தன. மேலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மலைப்பாம்பு உள்ளிட்ட 10 விலங்குகள் மீட்கப்பட்டன.

இந்த வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து அசாம் வெள்ளத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு கனமழையும், வெள்ளப்பெருக்கும் மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ள நிலையில், முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு நடத்திய அவர், நிவாரண பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை படகுகள் மூலம் அடைய முடியாவிட்டால், ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

இதைப்போல வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆஸ்பத்திரிகளில் ஊழியர்களும், மருந்துகளும் தயாராக வைத்திருக்க கேட்டுக்கொண்டார்.

மேலும் வெள்ளம் வடியத்தொடங்கியதும் பாதிப்பு விவரங்களை மதிப்பிடுமாறும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார்.


Next Story