லிங்காயத் சமூக முதல்-மந்திரி குறித்த சித்தராமையா கருத்தால் சர்ச்சை; பா.ஜனதா தலைவர்கள் கண்டனம்
லிங்காயத் சமூக முதல்-மந்திரி குறித்து சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தராமையாவுக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
லிங்காயத் முதல்-மந்திரி
கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் நாள்தோறும் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. ஆளும் பா.ஜனதாவில் இருந்து லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டோர் விலகி காங்கிரசுக்கு சென்றுவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதாவில் லிங்காயத் தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது இல்லை என்றும் விமர்சனம் செய்தது. இதனால் லிங்காயத் வாக்குகள் காங்கிரசுக்கு சென்றுவிடுமோ என்று ஆளும் பா.ஜனதா அச்சம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம், பா.ஜனதாவில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரியாக அறிவிக்க வியூகம் வகுக்கப்படுவதாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, 'கர்நாடகத்தில் தற்போது லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரியாக உள்ளார். அந்த லிங்காயத் முதல்-மந்திரி தான் பல்வேறு ஊழல்களை செய்து கர்நாடகத்தின் பெயரை பாழாக்கிவிட்டாரே' என்று கருத்து தெரிவித்தார். லிங்காயத் சமூகம் குறித்து சித்தராமையா தெரிவித்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா விளக்கம்
சித்தராமையா தனது இந்த கருத்து மூலம் லிங்காயத் சமூகத்தை அவமதித்துவிட்டதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லிங்காயத் சமூகம் குறித்த தனது சர்ச்சை கருத்துக்கு சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் நேற்று கூடலசங்கமாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பா போன்றோர் முதல்-மந்திரியாக இருந்துள்ளனர். அவர்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தனர். தற்போது முதல்-மந்திரியாக உள்ள பசவராஜ் பொம்மை அதிகளவில் ஊழல்களை செய்துள்ளார் என்று கூறினேன். ஆனால் எனது கருத்தை திரித்துவிட்டனர். லிங்காயத் சமூகத்தினர் மீது எனக்கு மிகுந்த கவுரவம் உள்ளது. சர்ச்சையை உருவாக்கும் வகையிலோ அல்லது அந்த சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் ரீதியிலோ நான் கருத்து கூறவில்லை' என்றார்.