குற்றங்களை தடுக்க மாநிலங்களிடையே ஒத்துழைப்பு அவசியம்; தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் சித்தராமையா பேச்சு


குற்றங்களை தடுக்க மாநிலங்களிடையே ஒத்துழைப்பு அவசியம்; தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:45 PM GMT)

குற்றங்களை தடுக்க மாநிலங்களிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

தென்இந்திய மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:-

போலீசார் பகல்-இரவு என்று பாராமல் பணியாற்றுகிறார்கள். இதை நான் பாராட்டுகிறேன். சைபர் குற்றங்களை தடுக்க போலீசார் தீவிரமாக செயலாற்ற வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக சைபர் தாக்குதல்கள் பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.

அதிநவீன அறிவியல் உபகரணங்கள் சைபர் குற்றங்களை தடுக்க உதவி புரிகிறது. கடந்த 2003-ம் நாட்டிலேயே முதல் முறையாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையம் கர்நாடகத்தில் திறக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய போலீஸ் நிலையம் செயல்படுகிறது. சமீபகாலமாக வழக்கமான குற்றங்களுடன் டிஜிட்டல் அச்சுறுத்தல்களையும் நாடு எதிர்கொண்டு வருகிறது.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்களை விட போலீசார் ஒரு படி மேலே இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் கர்நாடக போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது.

கர்நாடகத்தில் நக்சலைட்டு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கர்நாடக, கேரளா, தமிழ்நாடு இடையே உள்ள நக்சலைட்டு பிரச்சினைகளை தடுக்க போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம். பயங்கரவாத செயல்களை தடுக்க தகவல்கள் சேகரிப்பது, ஒருங்கிணைந்து செயல்படுவது, ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் குற்றங்கள், கொள்ளை கும்பல்களை கண்காணிக்க வேண்டியது அவசியம். மாநிலங்களிடையே ஒத்துழைப்பு இருந்தால் குற்றங்களை தடுப்பது சுலபம்.

குற்றங்கள் புரிய எல்லைகள் கிடையாது. குற்றங்களை தடுக்க மாநிலங்கள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். குற்றங்களுக்கு எப்படி எல்லைகள் இல்லையோ, அதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் எல்லைகள் இருக்கக்கூடாது.

போலீசார் எல்லை தாண்டியும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதால் மாநிலங்களிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம். கூட்டு நடவடிக்கை எடுப்பதால் குற்றவாளிகளை ஒடுக்க முடியும். பல்வேறு மாநில போலீசார் இணைந்து செயல்பட்டால் குற்றவாளிகளுக்கு பயம் வரும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (குற்றப்பிரிவு) வெங்கடராமன், உளவுப்பிரிவு ஐ.ஜி. செந்தில் வேலன் உள்பட கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story