வழக்கில் சிக்கிய காரை விடுவிக்க லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது


வழக்கில் சிக்கிய காரை விடுவிக்க லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

வழக்கில் சிக்கிய காரை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மாலூர்

பெங்களூருவை சேர்ந்தவர்

பெங்களூருவைச் சேர்ந்தவர் கிரீஷ். இவரது கார் ஒரு வழக்கில் கோலார் மாவட்டத்தில் உள்ள மாஸ்தி போலீசாரிடம் சிக்கிக் கொண்டது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அந்த காரை மாஸ்தி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதையடுத்து தனது காரை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கும்படி கிரீஷ் போலீசாரிடம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

இதையடுத்து போலீஸ்காரர் சசிக்குமார், காரை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். முதலில் லஞ்சம் கொடுக்க கிரீஷ் ஒப்புக் கொண்டார்.

லஞ்சம்

பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிரீஷ் இதுபற்றி கோலார் மாவட்ட லோக் அயுக்தா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கிரீசுக்கு சில அறிவுரை வழங்கினர். அதுமட்டுமின்றி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்து அதை போலீஸ்காரர் சசிக்குமாரிடம் கொடுக்குமாறு கூறினர்.

இதையடுத்து கிரீஷ், போலீஸ்காரர் சசிக்குமாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாலூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அருகே நின்று கொண்டிருப்பதாகவும், அங்கு வந்து லஞ்சப்பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்படியும் கூறியிருக்கிறார்.

பரபரப்பு

அதன்படி கிரீஷ் அங்கு சென்று லஞ்சப்பணத்தை போலீஸ்காரர் சசிக் குமாரிடம் கொடுத்தார். அவரும் லஞ்சப்பணத்தை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார், போலீஸ்காரர் சசிக்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து லோக் அயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story