பஞ்சாப்பில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை: காலிஸ்தான் ஆதரவாளர்கள் 78 பேர் கைது - முக்கிய தலைவன் தப்பியோட்டம்...!


பஞ்சாப்பில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை: காலிஸ்தான் ஆதரவாளர்கள் 78 பேர் கைது - முக்கிய தலைவன் தப்பியோட்டம்...!
x
தினத்தந்தி 18 March 2023 11:36 PM IST (Updated: 19 March 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிஸ் பஞ்சாப் டி காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார்.

காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு குழுக்களும் அதிகரிக்கத்தொடங்கின.

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய படையை அனுப்புமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கலவர தடுப்பு படையுடன் கூடிய 18 கம்பெனி துணை ராணுவப்படையை பஞ்சாப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்ய போலீசார் இன்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காலிஸ்தான் ஆதரவாளரான வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அம்ரித்சர் மாவட்டம் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஜலிபூர் ஹைரா கிராமத்தை போலீசார் இன்று சுற்றுவைத்தனர். ஆனால், அம்ரித்பால் தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேவேளை, பஞ்சாப் முழுவதும் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான காலிஸ்தான் ஆதரவு முக்கிய தலைவனான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பஞ்சாப்பில் நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.




Next Story