இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்


இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:45 PM GMT)

சிவமொக்காவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை போலீசார் நிறைவேற்றினர். அவன் ஒருமணி நேரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினான்.

சிவமொக்கா:

இதய நோயால் பாதிப்பு

சிக்கமகளூரு மாவட்டம் பாலேஒன்னூர் பகுதியை சேர்ந்தவர் தப்ரேஜ் கான். இவரது மனைவி நக்மா. இந்த தம்பதியின் மகன் அஜான்கான் (வயது 8). இந்த சிறுவன் பிறக்கும் போதே இதயத்தில் பிரச்சினை இருந்துள்ளது.

இதனால் அந்த சிறுவன் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் சிறுவனின் இதய நோய் தீவிரமடைந்ததால் அவனை தப்ரேஜ் கான், சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் சிறுவன் அஜான்கானை காப்பாற்றுவது மிகவும் கடினம் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், அஜான்கானின் ஆசைகளை கேட்டு அதனை நிறைவேற்றி வருகிறார்கள். உனது ஆசை என்ன என்று தப்ரேஜ் கேட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டராக ஆசை

அப்போது அஜான்கான், நடிகர் சுதீப்பின் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளான். இதையடுத்து தப்ரேஜ் தனது மகனை தியேட்டருக்கு நடிகர் சுதீப் நடித்த படத்தை காண அழைத்து சென்று நிைறவேற்றினார்.

பின்னர் பெரியவனாக ஆன பிறகு உனக்கு என்ன ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது என்று தப்ரேஜ் கேட்டுள்ளார். அப்போது அஜான்கான், தான் பெரியவனாக ஆன பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளான்.

இதனால் மகனின் ஆசையை நிறைவேற்ற தப்ரேஜ் முடிவு செய்தார். இதையடுத்து அவர் தொட்டபேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் அஞ்சன்குமாரை சந்தித்து, தனது மகனின் நிலை குறித்தும், அவனது ஆசைகள் குறித்தும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு மனமுறுகிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சன்குமார், இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்பு

இதையடுத்து அவர்கள் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாரும் அதற்கு அனுமதி அளித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சிறுவன் தொட்டபேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டான்.

இன்ஸ்பெக்டர் ஆடை அணிந்து வந்த அஜான்கானை போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் வரவேற்றார். பின்னர் அஜான்கானுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்து இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் சிறுவன் அஜான்கான் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று ஒரு மணி நேரம் பணியாற்றினான். அப்போது அவன் 2 போலீசாரின் குடும்ப சூழ்நிலைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு விடுமுறை அளித்தான். மேலும் திருட்டு வழக்கில் கைதான ஒருவரை அழைத்து திருடுவது தவறு, திருந்தி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினான்.

பாராட்டு

பின்னர் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டான். இதைடுத்து ஒரு மணி நேரம் கழித்து இரவு 8 மணி அளவில் தனது பொறுப்புகளை இன்ஸ்பெக்டர் அஞ்சன்குமாரிடம் ஒப்படைத்துவிட்டு அஜான்கான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story