கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா
கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கவர்னருக்கு கொரோனா
கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவர், நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கவர்னர் மாளிகையிலேயே தாவர்சந்த் கெலாட் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். இதற்கிடையில், பெங்களூருவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று இருந்தார்.
நேற்று முன்தினம் கூட கர்நாடக ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு விழாவில் கவர்னர் பங்கேற்று இருந்தார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதனால் முன் எச்சரிக்கையாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
153 பேருக்கு பாதிப்பு
கர்நாடகத்தில் நேற்று 19 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 லட்சத்து 64 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டனர்.
40 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 ஆயிரத்து 835 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று 139 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.