கொரோனா அதிகரிப்பு: மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை ஆலோசனை


கொரோனா அதிகரிப்பு: மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை ஆலோசனை
x

கொரோனா அதிகரிப்பு காரணமாக மாநிலங்களின் சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று (திங்கட்கிழமை) மாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெறும் இந்த காணொலி ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்பட மருத்துவ துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

மாநிலத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கி கூறுவார்கள் என தெரிகிறது.


Next Story