பெங்களூருவில் மீண்டும் விளம்பர பேனர்களுக்கு அனுமதி வழங்க மாநகராட்சி முடிவு
பெங்களூருவில் மீண்டும் பேனர்கள் வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மேலும் விளம்பர பலகைகள் மூலமாக ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு:-
மாநகராட்சி ஆலோசனை
பெங்களூருவில் பிளக்ஸ், பேனர்கள் வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. அதன்படி நகரின் அழகை கெடுக்கும் விதமாக பொது இடங்களில் பிளக்ஸ், பேனர்கள் வைப்போர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சட்டசபை தேர்தலையொட்டியும், தலைவர்களின் பிறந்தநாளையொட்டி நகரில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வந்தது. அப்போது தலைமை நீதிபதி பேனர்களை அகற்ற சுப முகூர்த்த நாளை எதிர்பார்த்து அரசும், மாநகராட்சியும் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் மீண்டும் பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாநகராட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
ரூ.1000 கோடி வருவாய்
ஏற்கனவே நகரில் பேனர்கள் வைக்க தடை விதிக்க கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது விளம்பர பேனர்கள் வைப்பது, சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பர பேனர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு மாநகராட்சி முன் வந்துள்ளது. அதன்படி, நகரில் எங்கு விளம்பர பேனர்கள் வைக்கலாம், எந்த இடங்களில் எல்லாம் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்பது குறித்து நிபுணர்களுடனும், அதிகாரிகளுடனும் விரிவாக ஆலோசித்து, விதிமுறைகளை அமல்படுத்த மாநகராட்சி முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது நகரில் சட்டத்திற்கு உட்பட்டு விளம்பர பலகைகள் வைக்க அனுமதிப்பதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும். அதனால் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்குவது குறித்தும், மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு கமிஷனர் ஜெயராம ராயபுரா தெரிவித்துள்ளார்.