கொரோனாவை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்;தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
கொரோனாவை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளதாக மாநகராட்சியின் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
பெங்களூரு, டிச.23-
அறிக்கை தாக்கல்
சீனா உள்பட வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியாவிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுப்பது குறித்து மத்திய அரசு நேற்று முன்தினம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியின் டாக்டர்கள், சுகாதார நிபுணர்கள் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க டாக்டர்கள், சுகாதார நிபுணர்கள் குழுவினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினால் அதை கட்டாயம் செய்வோம்.
எதிர்கொள்ள தயார்
கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி தலைமையில் இன்று(நேற்று) ஆலோசனை நடக்கிறது. இதில் நானும் கலந்து கொள்ள உள்ளேன். இந்த கூட்டத்தில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அது அப்படியே அமல்படுத்தப்படும். பெங்களூருவில் தற்போதும் கொரோனா தடுப்பு விதிகள் அமலில் தான் உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடுவார்கள். கூட்டம் கூடும் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும். அந்த வழிகாட்டுதல்களும் கட்டாயம் அமல்படுத்தப்படும். அரசின் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம். கொரோனாவை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. நகரில் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.