சொத்து தகராறில் தம்பதி படுகொலை
டி.நரசிப்புராவில் சொத்து தகராறில் தம்பதியை படுகொலை செய்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டி.நரசிப்புரா
சொத்து தகராறு
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா நுக்கள்ளி கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கேகவுடா (வயது 55). விவசாயி. இவரது மனைவி பாரதி (47). சிவலிங்கேகவுடாவின் சகோதரர் ஹனுமந்தேகவுடா (50). இவரும் விவசாயி ஆவார்.
இந்த நிலையில், சிவலிங்கேகவுடா, ஹனுமந்தேகவுடா இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவலிங்கேகவுடாவும், பாரதியும் அந்தப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
தம்பதி படுகொலை
அப்போது அங்கு ஹனுமந்தேகவுடா வந்தார். அவர், விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அண்ணன் சிவலிங்கேகவுடா, அண்ணி பாரதியுடன் தகராறு செய்தார்.
இந்த தகராறு முற்றிய நிலையில், ஹனுமந்தேகவுடா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அண்ணன் சிவலிங்கேகவுடா, அண்ணி பாரதியை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த சிவலிங்கேகவுடாவும், அவரது மனைவி பாரதியும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ஹனுமந்தேகவுடா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் கொலையான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் சரண்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் அண்ணன், அண்ணியை விவசாயி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக பன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஹனுமந்தேகவுடாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை ஹனுமந்தேகவுடா, பன்னூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு ஹனுமந்தேகவுடாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.