5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 22 வயது இளைஞனுக்கு தூக்கு
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 22 வயது இளைஞனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அகர்டலா,
திரிபுரா மாநிலம் ஹொவாய் மாவட்டம் நிஷன் சந்திர புரா பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 2021 பிப்ரவரி 22ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் வீடு அருகே வசித்து வரும் 22 வயதான அபிஜித் என்ற இளைஞனை கைது செய்தனர்.
அபிஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை வனப்பகுதிக்கு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தான்.
இதனை தொடர்ந்து வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்த 5 வயது சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அபிஜித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். மேலும், இது தொடர்பான வழக்கு ஹொவாய் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அபிஜித் குற்றவாளி என்று கோர்ட்டு இன்று அறிவித்தது. மேலும், 5 வயது சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி அபிஜித்திற்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளி அபிஜித் சிறையில் அடைக்கப்பட்டான்.