மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பு: தினசரி கொரோனா பாதிப்பு 20,557 ஆக உயர்வு
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்தது. இன்று மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24-ந் தேதி பாதிப்பு 20,279 ஆக இருந்தது. 25-ந் தேதி 16,866, 26-ந் தேதி 14,830, நேற்று 18,313 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 59 ஆயிரத்து 321 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 44 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,26,211 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,216 பேர் குணமடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது.
தற்போது 1,46,323 பேர் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,297 குறைவு ஆகும். நாடு முழுவதும் இதுவரை 203 கோடியே 21 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 40,69,241 டோஸ்கள் அடங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.