அமளியில் ஈடுபடுவது சபையின் கண்ணியத்தை குறைக்கிறது - நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா


அமளியில் ஈடுபடுவது சபையின் கண்ணியத்தை குறைக்கிறது - நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா
x

அமளியில் ஈடுபடுவது சபையின் கண்ணியத்தை குறைக்கிறது. விவாதம் மூலம் சபையின் மாண்பு அதிகரிக்கிறது என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.

உலகிலேயே சிறந்த ஆட்சிமுறை

உத்தரபிரதேச சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மாநில சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா ஆகியோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சியில் ஓம்பிர்லா பேசியதாவது:-

நாம் சுதந்திரம் அடைந்தபோது, எந்த ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்வது என்று ஒரு கேள்வி எழுந்தது. மிகுந்த யோசனைக்கு பிறகு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்வது என்று நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்தனர்.

இன்று உலகத்திலேயே சிறந்த ஆட்சிமுறையாக நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை விளங்குகிறது.

கண்ணியம்

நமது கடமையை ஆற்றியபடியே மக்களின் எதிர்பார்ப்புகளையும், உணர்வுகளையும் நாம் பூர்த்திசெய்ய வேண்டும்.

மக்கள் பெரிய நம்பிக்கையுடன் உங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். லட்சக்கணக்கானோரின் பிரதிநிதி நீங்கள். எனவே, சபையின் கண்ணியத்தை காப்பது நமது பொறுப்பு. எம்.எல்.ஏ.க்களின் நடத்தைதான், சபையின் கண்ணியத்தை உறுதி செய்கிறது.

அமளி

சபையில் அமளியில் ஈடுபடுவது, கோஷமிடுவது, பதாகைகளை காட்டுவது போன்றவை மூலம் சபையின் கண்ணியம் குறைகிறது. அதே சமயத்தில், விவாதங்கள் மூலம் மாண்பு காப்பாற்றப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளை முறையாக முன்வைக்க வேண்டும்.

சட்டங்களை உருவாக்குவதற்கு முன்பு அதுகுறித்து மக்களிடையே விரிவாக விவாதிக்க வேண்டும். நல்ல சட்டங்கள் உருவாக அது வழிவகுக்கும். அரசுக்கும் வழிகாட்டுதல் கிடைக்கும். மக்களும் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story