கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு எதிராக வீசும் காற்று;காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு
கர்நாடகா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 1985 ஆண்டு தேர்தலுக்கு கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரவில்லை.இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வருவதன் மூலம் 38 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.
மோடியின் கவர்ச்சி மற்றும் இரட்டை இயந்திர ஆட்சியின் முன்னேற்றத்தில் பாஜக நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், சி-வோட்டர் சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது, பாரதிய ஜனதாவுக்கு எதிராக காற்று வீசுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை 57 சதவீதம் பேர் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
இதை தவிர ஒரு சில சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. இருந்த போதிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா 104 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரசுக்கு 40.1 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.க.வுக்கு 34.7 சதவீத ஓட்டுகளும், மத சார்பற்ற ஜனதாதளத்திற்கு 17.9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
அடுத்த முதல் மந்திரியாக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு 3.2 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
50 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மோசம் என கருத்து தெரிவித்து உள்ளனர் கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் சமீபத்தில் லஞ்ச புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விபாட்சப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மேலும் சமீபத்தில் கர்நாடக பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தது.
போலீஸ் தேர்வில் நடந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் சிக்கினார்கள். இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.
இருந்த போதிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி பல தடவை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு என பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.