சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: அதிவேகமாக காரை ஓட்டிய பெண் டாக்டர் மீது வழக்கு பதிவு
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி விபத்தில் சிக்கி பலியானார்.
மும்பை,
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.
விபத்தில் சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் பலியானார்கள்.இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா மற்றும் அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலே ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்தநிலையில் இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா பந்தோலே(வயது 55) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அவரின் வீட்டில் வைத்து சுமார் ஒற்றரை மணி நேரம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அனஹிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனஹிதா இப்போதும் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமத்கிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.