டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு கார் விபத்தால் தலையில் பலத்த காயம் - மருத்துவர் தகவல்


டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு கார் விபத்தால் தலையில் பலத்த காயம் - மருத்துவர் தகவல்
x
தினத்தந்தி 5 Sep 2022 4:43 AM GMT (Updated: 5 Sep 2022 4:43 AM GMT)

மும்பை அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.

மும்பை,

மும்பை அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி (வயது 54). அவருக்கு மனைவி ரோஹிகா மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.2012 டிசம்பரில் ரத்தன் டாடா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அவர் தலைவராக பொறுப்பேற்றார்.அவர் அக்டோபர் 2016 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மிஸ்திரி, இந்நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் டிவைடரில் மோதியது.அவரது கார் பாலம் ஒன்றில் சரோட்டி பகுதியருகே சென்று கொண்டிருந்தபோது, மாலை 2.30 மணியளவில் சாலையின் நடுவே இருந்த பகுதியில் திடீரென மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

காரில் மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர்.அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சாலை விபத்தைத் தொடர்ந்து சைரஸ் மிஸ்த்ரி காசாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து, அரசு மருத்துவமனை டாக்டர் சுபம் சிங் கூறியதாவது, சைரஸ் மிஸ்திரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவரது பிரேத பரிசோதனை இங்கு நடக்க இருந்தது, ஆனால் மருத்துவ நிபுணர் கருத்துக்காக அவர் ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.யிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்ததாக டாக்டர் சுபம் சிங் கூறினார்.

கார் அதிவேகமாகச் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது என போலீஸ் சூப்பிரண்டு பாலாசாகேப் பாட்டீல் கூறினார். விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்த்ரி மற்றும் ஜிஹாங்கிர் பண்டொலி என 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் கூறுகையில், "விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும், ஆனால் முதல் பார்வையில் அதிக வேகம் காரணமாக விபத்து நடந்ததாக தெரிகிறது. காரில் 4 பேர் இருந்ததாகவும், அதில் ஒரு பெண் என்றும், அந்த பெண் காரை ஓட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

அந்த காரை மும்பையை சேர்ந்த மகப்பேறு டாக்டர் அனகிதா பண்டொலி (வயது 55) என்பவர் ஓட்டினார். காரில் அனகிதாவின் கணவர் டரியஸ் பண்டொலி மற்றும் அவரது சகோதரர் ஜிஹாங்கிர் பண்டொலி என மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அனகிதா பண்டொலி மற்றும் அவரது கணவர் டரியஸ் பண்டொலி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக வந்த கார், தவறான பக்கத்திலிருந்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, கார் டிவைடரில் மோதியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காரில் ஏதேனும் இயந்திரக் கோளாறு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அதிநவீன காரில் பொருத்தப்பட்டு இருந்த சிப்(விமான கருப்பு பெட்டியைப் போன்றது) ஒன்றில் இருந்து தரவை மீட்டெடுக்க முயற்சி நடைபெறுகிறது.


Next Story