தொடர்ந்து 2-வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு


தொடர்ந்து 2-வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு
x

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 2-வது முறையாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது தேசிய மாநாடு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.

இந்த மாநாட்டில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் சக்திகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது குறித்தும், பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு மாற்றை ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.ராஜா (வயது 73) தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019 ஜூலை மாதம் 21-ந் தேதி முதல்முறையாக இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2007-19 கால கட்டத்தில் தொடர்ந்து இரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

இந்த கூட்டத்தில் டி.ராஜா, கே.நாராயணா, அதுல்குமார் அஞ்சன், அமர்ஜித் கவுர், கானம் ராஜேந்திரன், பி.கே.காங்கோ, பிஸ்னோய் விஸ்வம், பல்லப் சென்குப்தா, அஜீஸ் பாஷா, ராம கிருஷ்ண பாண்டா, நாகேந்திரநாத் ஓஜா ஆகிய 11 பேர் தேசிய செயலகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய செயற்குழுவும், 99 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கவுன்சிலும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story