உலக அமைதி, மகிழ்ச்சிக்காக மகாகாலேஷ்வர் கோவிலில் சாமி தரிசனம்: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ்
உலக அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக மகாகாலேஷ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன் என கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
உஜ்ஜைன்,
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உலக புகழ் பெற்ற மகாகாலேஷ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து உள்ளார்.
அவர் பிரசித்தி பெற்ற பஸ்ம ஆரத்தி நிகழ்விலும் கலந்து கொண்டார். இந்த கோவிலில் சாம்பலை கொண்டு பூஜிக்கும் பஸ்ம ஆரத்தி சடங்கு புகழ் பெற்றது. இதன்படி, பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் இந்த சடங்கு நடைபெற்றது.
இதனை முடித்தவுடன், கோவில் கருவறைக்கு சென்ற அவர் ஜலாபிஷேக சடங்கிலும் ஈடுபட்டார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பாபா மஹாகாலை வழிபடுவதற்காக நான் வந்து உள்ளேன்.
ஒவ்வொருவரின் ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என நான் வேண்டி கொண்டேன். உலகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கடந்த 4-ந்தேதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
அவர்கள் பஸ்ம ஆரத்தி நிகழ்விலும், ஜலாபிஷேக சடங்கிலும் பங்கு கொண்டனர். கடந்த மாதத்தில், கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல் மற்றும் அவரது மனைவி கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
புதிதாக திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதியும் கோவிலுக்கு வந்து பாபா மஹாகால் தரிசனம் செய்து வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.