மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலம்
கலை, கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றிய மைசூரு தசரா விழா ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி ஊர்வலத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
மைசூரு:
கலை, கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றிய மைசூரு தசரா விழா ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி ஊர்வலத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்றது. இது கர்நாடக மக்களால் 'நாடஹப்பா' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி அன்று தொடங்கி விஜயதசமி வரை 10 நாட்கள் தசரா விழா நடைபெறும். தசரா விழாவுக்கு வரலாற்று சிறப்புள்ளது. அதாவது, கி.பி. 1610-ம் ஆண்டு விஜயநகர சமஸ்தானத்தில் விஜயநகரை ஆண்ட மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் தசரா விழா நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, ைமசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்ச மன்னர்களால் மைசூரு தசரா விழா ஆண்டுதோறும், வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி தொடங்கி வைத்தார்
இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில் பழமை மாறாமல் வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுகூரும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெள்ளித்தேரில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவுவதன் மூலமாக தொடங்கி வைத்தார். இது 412-வது தசரா விழாவாகும்.
தசரா விழா தொடங்கிய நாள் முதல் மைசூரு முழுவதும் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இளைஞர் தசரா, பெண்கள் தசரா, விளையாட்டு போட்டிகள், மல்யுத்த போட்டிகள், மலர் கண்காட்சி, உணவு மேளா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள், கன்னட நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
அலங்கார வண்டிகள் அணிவகுப்பு
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்புசவாரி ஊர்வலம் தான். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக அரண்மனை வளாகத்தில் மட்டும் நடந்த ஜம்பு சவாரி ஊர்வலம், இந்த ஆண்டு வழக்கம்போல அரண்மனையில் இருந்து பன்னிமண்டப தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடந்தது. இந்த ஆண்டுக்கான ஜம்புசவாரி ஊர்வலம் திட்டமிட்டப்படி நேற்று நடந்தது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள நந்தி தூணுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மதியம் 2.50 மணிக்கு சிறப்பு பூஜை செய்து கலாசார ஊர்வலத்தையும், பாரம்பரியத்தை நினைவுகூரும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பையும் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வண்டிகள் வந்தன. அத்துடன் கர்நாடகத்தின் கலாசாரத்தை சித்தரிக்கும் கிராமிய நடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தியப்படி வந்தனர்.
இதில் 55 கலைக்குழுவினரும், 47 அலங்கார வண்டிகளும் பங்கேற்றன. இதில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சார்பில் பங்கேற்ற புனித்ராஜ்குமார் உருவம் பொறித்த அலங்கார வண்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கலைக்குழுவினரின் நடனமும், இசையையும், அலங்கார வண்டிகளின் அணிவகுப்பையும், ஜம்பு சவாரி ஊர்வலத்தையும் காண அரண்மனை வளாகத்தில் 30 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
பன்னி மரத்திற்கு பூஜை
இதற்கு முன்பு அரண்மனை வளாகத்தில் அமைந்திருக்கும் பன்னி மரத்திற்கும், அங்குள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழிபட்டார். கலாசாரம் மற்றும் அலங்கார வண்டிகளின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில், தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து அவைகளுக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டன.
முன்னதாக நேற்று காலை மைசூரு அரண்மனை வளாகத்தில் மன்னர் யதுவீர் முன்னிலையில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் ஒரு ஜோடி கலந்துகொண்டனர். இதில் மொட்டை அடித்த வீரர்கள் கையில் ஆயுதத்துடன் மோதிக் கொண்டனர். இதில் ஒருவருடைய தலையில் ரத்தம் வந்ததும் போட்டி முடித்து கொள்ளப்பட்டது. இந்த மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மன்னர் யதுவீர் பரிசு வழங்கினார்.
அதன்பின்னர் மன்னர் யதுவீர், வெள்ளி ரதத்தில் அமர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பன்னி மரத்திற்கு அவர் கலாசார முறைப்படி சிறப்பு பூஜைகளை செய்தார். இதையடுத்து மன்னர் யதுவீர், தர்பார் ஹாலுக்கு சென்று நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். சுமார் அரை மணி நேரம் அவர் தர்பார் நடத்தினார்.
ஜம்புசவாரி ஊர்வலம்
இதற்கிடையே சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை, சாமுண்டி மலையில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பு பூஜை செய்தார். அதனை தொடர்ந்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி, கிரேன் உதவியுடன் அபிமன்யு யானை மீது ஏற்றி கட்டப்பட்டது. இதையடுத்து அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமக்க, அதில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். பின்னர் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை மற்ற யானைகளின் புடைசூழ சரியாக மாலை 5.37 மணிக்கு மகர லக்கனத்தில் அரண்மனை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகில் வந்து நின்றது.
அங்கு வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 3 முறை மலர்தூவி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பசவராஜ் பொம்மையுடன், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மன்னர் யதுவீர், மந்திரி சுனில்குமார், கலெக்டர் பகாதி கவுதம், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, மேயர் சிவக்குமார் உள்ளிட்டோரும் இருந்தனர்.
இதையடுத்து அபிமன்யு யானை உள்பட ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும் தும்பிக்கைகளை தூக்கி வணக்கம் செலுத்தின. அதன்பின்னர் 21 பீரங்கி குண்டுகள், பட்டாசுகள், போலீசாரின் பேண்டு வாத்திய இசை ஆகியவை முழங்க அபிமன்யு யானை தலைமையில் ஜம்பு சவாரி ஊர்வல அணிவகுப்பு தொடங்கியது. போலீசாரின் அணிவகுப்பு, குதிரைப்படை, ஒட்டகங்கள் ஆகியவை முன் செல்ல, அவற்றை தொடர்ந்து அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கம்பீரமாக நடைபோட்டு சென்றது. அதைத்தொடர்ந்து மற்ற யானைகளும் ஊர்வலமாக வந்தன. இந்த தசரா ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
போலீசாரின் சாகச நிகழ்ச்சி
மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கே.ஆர். சர்க்கிள், சயாஜிராவ் ரோடு வழியாக பன்னி மண்டபத்தில் உள்ள தீப்பந்து மைதானத்தை சென்றடைந்தது. அது வரையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அபிமன்யு யானை தலைமையில் யானைகள் அணிவகுத்து சென்றன. மேலும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பல்வேறு கலைக்குழுவினரும் ஆடி, பாடியபடியும், சாகசங்களை செய்தபடியும் சென்றனர். இந்த ஜம்புசவாரி ஊர்வலத்தை சாலையின் இருப்புறங்களிலும் அமர்ந்து லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தீப்பந்து மைதானத்தை ஊர்வலம் சென்றடைந்ததும், அங்கு போலீசாரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெய்சிலிர்க்க வைத்த அந்த சாகச நிகழ்ச்சிகளை பார்த்து அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பின்னர் பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெற்றது. வாணவேடிக்கை முடிவடைந்ததும் 10 நாட்களாக கோலாகலமாக நடந்த தசரா விழா நிறைவடைந்தது.
பலத்த பாதுகாப்பு
ஜம்புசவாரி ஊர்வலத்தையொட்டி மைசூருவில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரை ஏராளமான ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதன்மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.