திரிபுராவில் இறந்தவர் உயிருடன் திரும்பினார் - வேறொரு உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த விபரீதம்


திரிபுராவில் இறந்தவர் உயிருடன் திரும்பினார் - வேறொரு உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த விபரீதம்
x

திரிபுராவில் இறந்தவர் உயிருடன் திரும்பி குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

அகர்தலா,

திரிபுரா மாநிலம் அகர்தலாவின் தெற்கு ரங்குத்தியா கிராமத்தில் வசித்த ஆகாஷ் சர்கார் என்ற 22 வயது இளைஞர் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் மேலர்மாத் பகுதியில் குளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது புகைப்படம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பகிரப்பட்டது. சமூகவலைத்தளங்களிலும் அந்த புகைப்படம் பரவியது.

இதைப் பார்த்த ஆகாஷின் கிராமத்தினர், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷின் தந்தை அடையாளங்களை கூறி இறந்தவர் உடலை வாங்கி 2 நாட்களுக்கு முன்பு இறுதிச் சடங்கு செய்தார். இந்தநிலையில் இறந்துபோனதாக கருதப்பட்ட இளைஞர் ஆகாஷ் நேற்று வீடு திரும்பி உள்ளார். இளைஞர் ஆகாஷ் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் வழிதவறி பாட்டலா நகருக்கு சென்றதும், அங்கு பசிபோக்கவும், போதைக்காகவும் பிச்சை எடுத்து வாழ்ந்ததாகவும் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே பாட்டலா நகரில் அவரை அடையாளம் கண்ட உறவினர் ஒருவர், ஊரில் நடந்த விஷயங்களை கூறி, ஆகாஷை திரும்ப அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உயிருடன் இருக்கும்போதே தனக்கு இறுதிச்சடங்கு நிகழ்ந்ததை அறிந்து வியப்பும், அதிர்ச்சியும் அடைந்த ஆகாஷ் வீடு திரும்பி குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆகாஷின் தந்தை இறந்தவரின் உடலை தவறுதலாக அடையாளம் காட்டியதால் இந்த தவறு நடந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆகாஷின் தந்தை தவிர வேறு யாரும் இறந்தவரின் உடலுக்கு உரிமை கோராததால் போலீசாரும் சந்தேகம் அடையாமல் அவர்களிடம் உடலை ஒப்படைத்து உள்ளனர்.


Next Story