கார்-லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
கார்-லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் நிப்பானி புறநகரில் பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் லாரியும், காரும் சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தன. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நிப்பானி சாகரா போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நிப்பானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் பலியானவர்கள் பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது பலியானவர்கள் நிப்பானியை சேர்ந்த பாபு பட்டேல் (வயது 60), அவரது மனைவி ஷாயா (55), சம்பந்தாயி மகதும் (80), மகேஷ் பட்டீல் (23) என்பதும், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றபோது, பெலகாவியில் இருந்து நிப்பானி நோக்கி வந்த லாரி மோதிய விபத்தில் அவர்கள் பலியானதும் தெரியவந்தது. விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.