ஒரு நிமிடத்துக்கு 2¼ லட்சம் ரெயில் டிக்கெட் வழங்கும் வகையில் திறன் மேம்படுத்த முடிவுஅஸ்வினி வைஷ்ணவ் தகவல்


ஒரு நிமிடத்துக்கு 2¼ லட்சம் ரெயில் டிக்கெட் வழங்கும் வகையில் திறன் மேம்படுத்த முடிவுஅஸ்வினி வைஷ்ணவ் தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2023 4:45 AM IST (Updated: 4 Feb 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நிமிடத்துக்கு 25 ஆயிரம் ரெயில் டிக்கெட்டுகள் வழங்குவதை 2¼ லட்சமாக அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இருக்கும்.

தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதைப்போல பயணிகளின் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனையும் நிமிடத்துக்கு 40 ஆயிரம் என்ற இலக்கில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

2022-23-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4,500 கி.மீ. புதிய ரெயில் பாதை இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 12 கி.மீ. ஆகும். அதேநேரம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாளுக்கு 4 கி.மீ.யாக இருந்தது.

2023-24-ம் நிதியாண்டில் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய பாதைகள், இரட்டைமயமாக்குதல் உள்ளிடடவை அடங்கும்.

நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 'ஜன சுவிதா' கடைகள் நிறுவப்படும். இவை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இந்த கடைகளில் தினசரி உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.

ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கிழ் 550 ரெயில் நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்.

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரிய நகரங்களில் பணியாற்றும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Next Story