கர்நாடகத்தில் இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பயிற்சி மையம் திறக்க முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடகத்தில் இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பயிற்சி மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
சட்டங்களை இயற்றுவோம்
கர்நாடக அரசின் போலீஸ் துறை சார்பில் போலீஸ் தியாக நாள் விழா பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடக போலீஸ் துறைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. போலீசார் தங்கள் பணியின்போது, பலர் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். சமுதாயத்தில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சில சக்திகள் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டு வருகின்றன. நாம் குற்றங்கள் நடந்த பிறகு அவற்றை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றுகிறோம்.
போலீசார் நியமனம்
ஆனால் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கான சட்டங்களை கொண்டு வர வேண்டும். போலீசாருக்கு நவீன ஆயுதங்கள் அவசியம் தேவைப்படுகிறது. மூத்த அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால், அது கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகளின் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் போலீசாரின் பங்கு மிக முக்கியமானது.
போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் கர்நாடகம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது. காவலர்கள் நியமனங்களும் அதிகரித்துள்ளன. ஆண்டுதோறும் 5 ஆயிரம் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்படுகிறார்கள். பணி நியமனங்களில் எந்த ஊழலும் நடைபெற கூடாது. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
தீவிரமான நடவடிக்கைகள்
போலீசாருக்கு அளிக்கும் பயிற்சியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் சைபர் குற்றங்களை தடுக்க பயிற்சி அளிப்பது போன்ற பணிகள் நடைபெற வேண்டும். கடந்த ஒரு வருடமாக புதிய போலீஸ் நிலையங்கள் திறக்கப்படுவது அதிகரித்துள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம். அதற்காக தனியாக பயிற்சி மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் தியாகம், சாதனைகள் மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு போலீஸ் பொருட்கள் சேகரிப்பு மையம், பயங்கரவாத தடுப்புபடையை பலப்படுத்துவது, சிறைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் திறனை மேம்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போலீசாரின் தியாகம் வீணாகாமல் நாம் எப்போதும் அதனை நினைக்க வேண்டும். அது நமது கடமை. எங்கள் அரசு போலீசாருடன் நிற்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா, கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.