மேற்கு வங்காள மந்திரி சபையை மாற்றியமைக்க முடிவு; முதல்-மந்திரி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ளது என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்து உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உதவியாளரான ஆர்பிதா முகர்ஜியிடம் இருந்து ரூ.35 கோடிக்கும் மேற்பட்ட பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். மேற்கு வங்காள அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மந்திரி மற்றும் கட்சி பதவிகளில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி முற்றிலும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்காள மந்திரி சபை முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய மந்திரி சபை அமைக்கப்படும் என பலரும் பலவிதத்தில் செய்தியாக எழுதி வருகின்றனர்.
ஆனால், அப்படி எதுவும் எங்களிடம் திட்டம் இல்லை. ஆம். மந்திரி சபையில் மாற்றம் இருக்கும். சுப்ரதா முகர்ஜி, சதன் பாண்டே ஆகிய மந்திரிகளை கட்சி இழந்து விட்டது. பார்த்தா சாட்டர்ஜி சிறையில் உள்ளார். அதனால், அவர்கள் அனைவரின் பணியையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இவற்றை தனியாக என்னால் கவனிப்பது என்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார். அதனால், மந்திரி சபை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ளது. 4 முதல் 5 பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு வங்காளத்தில் 23 மாவட்டங்கள் இருந்தன. சுந்தர்பன், இச்சிமதி, ராணாகாட், பிஷ்ணுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் ஒரு மாவட்டம் கூடுதலாக இடம் பெற உள்ளது. இதனால், கூடுதலாக 7 மாவட்டங்களை சேர்த்து மொத்த எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்க உள்ளது என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.