எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்; சில தொகுதிகளில் புதிய முகங்களை நிறுத்த முடிவு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சில தொகுதிகளில் புதிய முகங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஆலோசனை
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் ஆளும் பா.ஜனதா கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர் பட்டியலுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றனர்.
இதுகுறித்து பா.ஜனதா உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய முகங்கள்
இந்த நிலையில் ஜே.பி.நட்டாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா ஆகியோர் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, சிக்கல் நிறைந்த தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். சில தொகுதிகளில் புதிய முகங்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஆனால் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அதுவரை வேட்பாளர்கள் குறித்து எதுவும் சொல்ல முடியாது. புதிய வேட்பாளர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அதனால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
சுய விவரங்கள்
வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதனால் வேட்பாளர் பட்டியல் வருகிற 12-ந்தேதி (நாளை) வெளியாகலாம். வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. புதிய வேட்பாளர்களின் சுய விவரங்கள் பா.ஜனதா தலைமையிடம் இருந்து வந்ததும், எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.