மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற முடிவு: காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா போராட்டம்

மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெறுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மங்களூரு-
மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெறுவதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மதமாற்ற தடை சட்டம்
கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, கட்டாய மத மாற்ற தடை சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மதமாற்ற தடை சட்டத்தை நாங்கள் திரும்ப பெறுவோம் என்று கூறி வந்தனர். அதன்படி பெரும்பான்மை இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்தநிலையில் கூறியப்படி மாநில அரசு மத மாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற்றது. இது பா.ஜனதா கட்சியினரிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநில அரசுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற்ற மாநில அரசை கண்டித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
மாநில முழுவதும் போராட்டம்
அதன்படி நேற்று மாநில முழுவதும் பா.ஜனதா கட்சியினர், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் இந்து அமைப்பினரும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் உடுப்பியில் பஜ்ரங்க தளம் சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வஜ்ரதேய் மடத்தின் மடாதிபதி ராஜசேகரானந்த சாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான பஜ்ரங்தள பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல சிவமொக்கா மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு முன்னாள் மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா, சிவமொக்கா தொகுதி எம்.எல்.ஏ.சன்னபசப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது அவர்கள் மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற்றது கண்டனத்திற்குரியது. உடனே இந்த முடிவை மாநில அரசு மாற்றி கொள்ளவேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
திரும்ப பெற கூடாது
சிகாரிபுராவில் எம்.பி ராகவேந்திரா, எம்.எல்.ஏ.விஜயேந்திரா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல பல மாவட்டங்களில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இந்து சமுதாயத்தை ஒரு கால்பந்தை போன்று எட்டி உதைக்க நினைக்கிறது. அதனால்தான் பா.ஜனதா கொண்டு வந்த சட்டங்களை திரும்ப பெற்று வருகிறார்கள். இது கண்டனத்திற்குரியது. குறிப்பாக பா.ஜனதா கொண்டு வந்த மத மாற்ற தடை சட்டத்தை காங்கிரஸ் திரும்ப பெற்றுள்ளது. இது பழிவாங்கும் அரசியல். எனவே மாநில அரசு மத மாற்ற தடை சட்டத்தை திரும்ப பெறும் முடிவை கைவிடவேண்டும். இ்ல்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.