டீப் பேக் விவகாரம்; சமூக வலைதளங்களுக்கான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் - மத்திய அரசு
சமூக வலைதளங்களுக்கான இடைநிலை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமூக வலைதளங்களுக்கான விதிகள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எனவே, சமூக வலைதளங்களுக்கான இடைநிலை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரும்.
டீப் பேக் வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிந்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதற்கான பொறுப்பை சமூக வலைதளங்களுக்கு வழங்கிடும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். சமூக வலைதளங்கள் மக்களிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் அதில் உள்ள எதிர்மறையான பிரச்சினைகளை நீக்க வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும். அதற்கு கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.