பாகிஸ்தான் பெண் ஏஜெண்டிடம் நெருங்கி பழக ராணுவ ரகசியங்களை கூறிய விஞ்ஞானி- அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் பெண் ஏஜெண்டிடம் நெருங்கி பழக புனே விஞ்ஞானி அவரிடம் ராணுவ ரகசியங்களை கூறிய அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளன.
மும்பை
புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்ம நபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஒ. ஊழியர் ஒருவர் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பின் ஏஜெண்டுக்கு தெரிவித்தது தெரியவந்தது. அவர் வாட்ஸ்அப் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய பாதுகாப்பு துறை ரகசியங்களை தெரிவித்து உள்ளார். இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த ம மாதம் பிரதீப் குருல்கரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணிடம் ஆபாச கால் (ஹனி டிரப்) வலையில் சிக்கிய ராணுவ ரகசியங்களை கூறியது தெரியவந்தது. கடந்த மாதம் போலீசார் விஞ்ஞானிக்கு எதிராக குற்றப்பத்திகை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண் இங்கிலாந்தை சேர்ந்த மென்பொறியாளர் சாரா தாஸ்குப்தா என கூறி விஞ்ஞானி பிரதீப் குருல்கருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். அவர் விஞ்ஞானிக்கு ஆபாச படங்கள், குறுந்தகவல்களை அனுப்பினார். விஞ்ஞானி, பெண் உளவாளியின் ஆபாச படங்களை பார்த்து கிறங்கி உள்ளார். அவரிடம் நெருங்கி பழக விரும்பி உள்ளார். எனவே அவர் டி.ஆர்.டி.ஒ. பற்றி மிகவும் ரகசியமான தகவல்களை செல்போனில் சேமித்து அதை பெண் உளவாளியுடன் பகிர்ந்து உள்ளார். ஏவுகணைகள், டிரோன்கள், பிரமோஸ், அக்னி ஏவுகணை லாஞ்சர், யு.சி.வி. போன்ற திட்டங்கள் குறித்து தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் பெண் ஏஜெண்டும், விஞ்ஞானியும் 2022 ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை பேசி உள்ளனர். அவரின் நடவடிக்கை குறித்து டி.ஆர்.டி.ஒ. விசாரணையை தொடங்கியவுடன் 2023 பிப்ரவரியில் விஞ்ஞானி, பெண் ஏஜெண்டின் வாட்ஸ்அப் எண்ணை பிளாக் செய்து இருக்கிறார்.
உடனடியாக அவருக்கு வேறு இந்திய செல்போன் எண்ணில் இருந்து, 'ஏன் என்னை பிளாக் செய்தீர்கள்' என்ற குறுந்தகவல் வந்து உள்ளது. விஞ்ஞானி யாரும் இடமும் தெரிவிக்க கூடாது அலுவலக நிகழ்வுகள், இடங்கள் பற்றியும் பெண் ஏஜெண்டிடம் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து மென்பொறியாளர் என விஞ்ஞானியிடம கூறிய பெண்ணின் ஐ.பி. முகவரி பாகிஸ்தானை சேர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.