தென்கோடி முனையை பார்வையிட்டார், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்


தென்கோடி முனையை பார்வையிட்டார், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:00 AM GMT (Updated: 7 Jan 2023 12:00 AM GMT)

நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

புதுடெல்லி,

நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அந்தமான் நிகோபாருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முதல் நாளான நேற்று முன்தினம், அவர் போர்ட் பிளேரில் உள்ள அந்தமான் நிகோபார் ராணுவ தலைமையகத்துக்கு சென்றார். அங்கு அவர் ராணுவத்தினர் மத்தியில் பேசும்போது, "உலகிலேயே வலிமை வாய்ந்த ராணுவமாக இந்திய ராணுவத்தை மாற்றுவதே இந்தியாவின் குறிக்கோள்" என கூறினார்.

மேலும், இந்தப் பிராந்தியத்தில் படைகள் தேசிய நலனை தொடர்ந்து பாதுகாக்குமாறு ஊக்குவித்தார்.

தயார் நிலை ஆய்வு

இந்தியாவின் ஒரே ஒருங்கிணைந்த கட்டளை மையமான அந்தமான் நிகோபார் ராணுவ தலைமையகத்தில் கட்டளை மையத்தின் செயல்பாட்டு தயார் நிலையை அவர் ஆய்வு செய்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துக்கிற நிலையில், அந்தமான் நிகோபார் கட்டளை மையம், அங்கு கண்காணிப்பு பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரா முனையை பார்வையிட்டார்....

பயணத்தின் 2-வது நாளான நேற்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இந்திரா முனைக்கு (இந்திரா பாயிண்ட்) சென்று பார்வையிட்டார். இந்த இந்திரா முனை, நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கிராமம் ஆகும். இதுதான் நமது நாட்டின் தென்கோடிமுனை ஆகும்.

இது சுற்றுலாப்பயணிகளிடம் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குடன் அந்தமான் நிகோபார் ராணுவ தளபதி அஜய் சிங்கும் உடன் சென்றிருந்தார்.

பிராந்திய பாதுகாப்பு

இதையொட்டி ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " பிராந்தியத்தில் 'சிக்ஸ் டிகிரி சேனல்', சர்வதேச போக்குவரத்துக்கான முக்கிய கப்பல் பாதை ஆகும். ஆயுதப்படைகளின் வலுவான இருப்பு, பிராந்தியத்தில் இந்தியா தனது பாதுகாப்பு வழங்கும் பொறுப்பினை நிறைவாக செய்வதற்கு தயார்படுத்தி உதவுகிறது" என கூறப்பட்டுள்ளது.


Next Story