முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் தாமதம்: பா.ஜனதா கடும் விமர்சனம்
முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் தாமதம்: பா.ஜனதா கடும் விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்றாலும் தனக்கே முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார். இதனால் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை பா.ஜனதா விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி வருந்தத்தக்க நிலையில் உள்ளது. அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒரு தபால்காரர் போல் கருதப்படுகிறார். காங்கிரஸ் கட்சி தனது முதல்-மந்திரி தேர்வை பார்க்க வேண்டும். பா.ஜனதா தனது முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடத்துகிறது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரம் வழங்குவதை சிக்கல் இன்றி முடிக்கிறது. நீண்ட ஆலோசனை நடத்தியும் காங்கிரசால் முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியவில்லை.
இவ்வாறு அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பா.ஜனதாவில் பதவிக்காக ஒருவருடன் மற்றொருவர் மோதுவது, ஆதரவாளர்களை ரகசியமாக தங்க வைப்பது, ஊடகங்கள் மூலம் கருத்துகளை கூறி மிரட்டுவதை மக்கள் பாா்த்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.