இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதில் தாமதம்


இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதில் தாமதம்
x

கோலார் தங்கவயலில் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

உத்தரவாத திட்டம்

கர்நாடக அரசு தேர்தலுக்கு முன்பு 5 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதன்படி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. வாக்குறுதிப்படி 4 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சக்தி திட்டம், அன்னபாக்ய திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம், கிரகலட்சுமி எனப்படும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதில் இறுதியாக இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் கிரகலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த 30-ந் தேதி மைசூவில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட சில இல்லத்தரசிகளுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை பலருக்கு இந்த உதவி தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உதவி தொகை வரவில்லை

6-ந் தேதிக்குள் இந்த உதவி தொகை வழங்கப்பட்டுவிடும் என்று உறுதி அளித்துவிட்டு, ஏமாற்றியதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோல கோலார் தங்கவயல் மாவட்டத்திலும் பெண்கள் வீடுகளுக்கும், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களுக்கும் நடையாக நடந்து வருகின்றனர்.

ஆனால் வங்கி அதிகாரிகள் இதுவரை எந்த பணமும் ஏறவில்லை என்று கூறியதும் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பெண்கள் மாநில அரசு உடனே இந்த உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ஆதங்கம்

இதுகுறித்து கோலார் தங்கவயலை சேர்ந்த பெண்கள் கூறுகையில், வாக்குறுதி அளித்துவிட்டு, அந்த திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியும் விட்டது. ஆனால் இதுவரை உதவி வரவில்லை. இது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இல்லையென்றால் தேதியை குறிப்பிட்டு, அந்த நாட்களுக்குள் உதவி தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடவேண்டும்.

இதுவரை எந்த தகவலையும் அரசு வெளிப்படையாக கூறவில்லை. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் அரசின் உத்தரவாத திட்டங்கள் சில மாதங்களில் காணாமல் போய்விடும் என்று நினைக்கிறோம் என்றனர்.


Next Story