டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்!
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்.
கடந்த சில நாட்களாக டெல்லி அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 19-ந்தேதி இதன்மீது நடவடிக்கை எடுக்கும் ஒரு பகுதியாக மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அமைப்பு அதிரடி சோதனையிலும் ஈடுபட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம்அத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடத்திய சோதனைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக நேற்று கெஜ்ரிவால் தனது இல்லத்தில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், டெல்லி அரசு சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.