டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று குஜராத் பயணம்


டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று குஜராத் பயணம்
x

குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசை பஞ்சாப்பில் வீழ்த்தி வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்திலும் அதிகாரத்திற்கு வரும் முனைப்பில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை வரிசையாக செயல்படுத்தியும் வருகிறது. இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது.

இதன்படி குஜராத்துக்கு கடந்த 21-ந்தேதி வருகை தந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, குஜராத் மக்கள் அனைவருக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி அசத்தினார். இதனை தொடர்ந்து, அவர் குஜராத்திற்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 26-ந்தேதி சோம்நாத் கோவிலுக்கும் அவர் சென்றார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் குஜராத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்குள்ள வெராவல் பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதன்பின், ராஜ்கோட் செல்லும் அவர் அங்குள்ள கோவிலில் நடைபெறும் மகா ஆரத்தியில் பங்கேற்க உள்ளார்.


Next Story