ஞானவாபி மசூதி சிவலிங்கம் பற்றி சர்ச்சை கருத்து: டெல்லி பேராசிரியருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு!


ஞானவாபி மசூதி சிவலிங்கம் பற்றி சர்ச்சை கருத்து: டெல்லி பேராசிரியருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு!
x

எந்த ஒரு விஷயமும், 130 கோடி மக்களின் வெவ்வேறு கருத்துகளையும் கொண்டிருக்க முடியும் என்று கோர்ட்டு தெரிவித்தது.

புதுடெல்லி,

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான தகவல் குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரத்தன் லால், தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்ட கருத்துக்கள், மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாக உள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர், லால் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் மீது இழிவான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். ஞானவாபி மசூதி விவகாரம் மிகவும் முக்கியமானது மற்றும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும் போது, அவர் பதிவிட்ட கருத்துக்கள், மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது:- "குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்தவொரு நபரின் அல்லது குழுவின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை. நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி அவர் ஒரு மேலோட்டமான கருத்தை தான் தெரிவித்தார்" என்றார்.

வழக்கை விசாரித்த டீஸ் ஹசாரி கோர்ட்டின் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சித்தார்த்தா மாலிக், பேராசிரியர் ரத்தன் லாலுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் கோர்ட்டு தரப்பில் தெரிவித்ததாவது:-

"தற்போது குற்றம் சாட்டப்பட்டவர், குற்றப் பின்னணி இல்லாத நல்ல பெயர் பெற்றவர். குற்றம் சாட்டப்பட்ட நபர், சட்டத்தின் போக்கை விட்டு தப்பியோட வாய்ப்பில்லை. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கோர்ட்டு கருதுகிறது. ஆனால், விசாரணை அதிகாரியின் தேவைக்கேற்ப விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் சர்ச்சை தொடர்பான எந்தவொரு சமூக ஊடக பதிவையும் அல்லது நேர்காணல்களையும் பதிவிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இந்திய நாகரிகம் உலகின் மிகப் பழமையான ஒன்றாகும். மேலும் அனைத்து மதங்களையும் சகிப்புத்தன்மையுடனும் ஏற்றுக்கொண்ட நாகரிகமாக அறியப்படுகிறது. இந்தியா 130 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு. எந்த ஒரு விஷயமும், 130 கோடி மக்களின் வெவ்வேறு கருத்துகளையும் கொண்டிருக்க முடியும்" என்று கோர்ட்டு தெரிவித்தது.


Next Story