டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் கணவரை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த 2-வது மனைவி


டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் கணவரை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த 2-வது மனைவி
x

கணவரை கொன்று 22 துண்டுகளாக உடலை பிரிட்ஜில் வைத்த மனைவி அவற்றை தினமும் ஒவ்வொரு துண்டாக எடுத்து வீசிச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோல் மற்றொரு பயங்கர சம்பவம் நடந்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் போலீசாருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிழக்கு டெல்லியில் உள்ள பாண்டவநகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ் (வயது 45). இவர் பீகாரை சேர்ந்தவர். டெல்லியில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூனம் (48). இவர்களுக்கு தீபக் (25) என்ற ஒரு மகன் உள்ளார். தீபக்கிற்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர்.

அஞ்சன்தாஸ் தனது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனை பூனமும், தீபக்கும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதுதவிர அஞ்சன்தாசுக்கு பீகாரில் ஏற்கனவே மனைவியும், 8 மகன்களும் உள்ளனர். முதல் திருமணத்தை மறைத்து பூனத்தை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பூனத்தின் தங்கநகையை விற்று அதில் கிடைத்த பணத்தை பீகார் குடும்பத்துக்கு அஞ்சன்தாஸ் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே அஞ்சன்தாஸ் மீது கோபத்தில் இருந்த பூனத்திற்கும், தீபக்கிற்கும் இது மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. எனவே அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதமே திட்டமிட்டனர். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையே கடந்த மே மாதம் அஞ்சன்தாசுக்கு மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்து பூனம் கொடுத்தார். இதனை குடித்த அவர் மயங்கினார். பின்னர் கத்தியை எடுத்து மனைவி பூனமும், மகன் தீபக்கும் சேர்ந்து அஞ்சன்தாசின் கழுத்தை ஆட்டை அறுப்பதை போல அறுத்தனர். உடலில் இருந்து ரத்தம் வடியும்வரை உடலை ஒரு நாள் முழுவதும் அப்படியே போட்டனர்.

கணவர் இறந்த பிறகும் ஆத்திரம் தீராத தாயும், மகனும் உடலை 22 துண்டுகளாக கூறு போட்டனர். பின்னர் அவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து பிரிட்ஜில் வைத்தனர்.

அதன்பின்னர் ஒவ்வொரு உடல் பாகங்களாக எடுத்து வந்து தினமும் தலைநகர் டெல்லி முழுவதும் வீசி எறிந்தனர். அதுவரை அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராதவாறு இருவரும் பார்த்துக்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் பாண்டவ்நகரில் தாசின் உடல் உறுப்புகள் போலீஸ் கையில் சிக்கின. மேலும் ராம்லீலா மைதானத்திலும் சில பாகங்கள் கிடைத்தன. ஆனால் அவை சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

இருப்பினும் போலீசார் அந்தப்பகுதியில் வீடுவீடாக சென்று அந்த சமயத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக இந்த உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இது அவரது உடல்பாகங்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல்பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. அவரை பின்தொடர்ந்து பூனமும் சென்றுள்ளார்.

இதன் காரணமாக தாயையும், மகனையும் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கணவரை கொன்றதை பூனம் ஒப்புக்கொண்டார். மாயமாகி 6 மாதமாகியும் கணவர் பற்றி அவர் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவரை கொலை செய்ததாக கைதாகியுள்ள பூனம் 3 பேரை திருமணம் செய்தவர். இவருக்கு 14 வயதிலேயே சுக்தேவ்திவாரி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர் இவரை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் கல்லு என்பவருடன் இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. இவருக்கு பிறந்தவர்தான் தீபக். 2-வது கணவர் இறந்த பின்னர் அஞ்சன்தாசை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.


Next Story