டெல்லி தீ விபத்து; 5 குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் என்.ஜி.ஓ. முடிவு
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்க என்.ஜி.ஓ. அமைப்பு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் கடந்த 13ந்தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, மளமளவென தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் சிக்கி மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என இழப்பீடு அறிவித்து உள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க பா.ஜ.க.வை சேர்ந்த டெல்லி பிரிவு பொருளாளர் விஷ்ணு மிட்டல் என்பவர் முன்வந்துள்ளார். அவர் நடத்தி வரும் என்.ஜி.ஓ. சார்பில் இந்த தொகை வழங்கப்படும்.
இதுபற்றி மிட்டல் கூறும்போது, தீ விபத்தில், தங்களுடைய குடும்பத்திற்காக வேலைக்கு சென்ற ஒரே நபரும் உயிரிழந்த சோகத்தில் சிக்கிய 5 குடும்பங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
அந்த 5 குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் இதுதவிர்த்த கூடுதல் குடும்பத்தினருக்கும் நிவாரண தொகையை என்.ஜி.ஓ. வழங்கும். நாங்கள் நேரடியாக அவர்களது கணக்குகளில் தொகையை செலுத்தி விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.