டெல்லி இளம்பெண் கொடூர மரண விவகாரம்; அஞ்சலியின் மாமா நீதி கோரி போராட்டம்
அஞ்சலி அரசியல்வாதியின் மகளாக இருந்திருப்பார் எனில் டெல்லி போலீசாரின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும்? என போராட்டத்தில் ஈடுபட்ட நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று அதிகாலையில் விபத்தில் சிக்கி, காரில் 12 கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது.
இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நிர்வாண நிலையிலான உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த வழக்கில், 13 கி.மீ. தொலைவிலான அனைத்து சி.சி.டி.வி. காட்சிகள் பதிவையும் போலீசார் ஆய்வு செய்யவில்லை. அனைத்து சாட்சிகளின் வாக்குமூலமும் பெறப்படவில்லை. 302 பிரிவு சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
எனினும், சம்பவம் நடந்தபோது, காரில் இருந்த 5 பேரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர் அங்குஷ் மற்றும் அஷுதோஷ் ஆகிய வழக்கோடு தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், 7-வது குற்றவாளியான அங்குஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது.
அஞ்சலியின் இறுதி சடங்குகள் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரது தோழி நிதி, சம்பவத்தன்று, அஞ்சலி குடிபோதையில் வாகனம் ஓட்டுவேன் என வலியுறுத்தினார் என கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அஞ்சலியின் உடல் மாதிரிகளில் ஆல்கஹால் இருந்ததற்கான சான்றுகள் காணப்படவில்லை. எனினும், இது வழக்குடன் தொடர்புடையது அல்ல என போலீசார் கூறி விட்டனர்.
ஆனால், நிதி மீது 30 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு டெல்லி போலீசில் பதிவு செய்யப்பட்ட விவரமே பின்னர்தான் தெரிய வந்தது. இதனால், அவரிடம் முழு விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில், ஆள்மாறாட்ட சம்பவமும் நடந்து உள்ளது. காரில் இருந்தவர்கள், முதலில் சம்பவம் பற்றி தெரியாது என போலீசில் கூறி விட்டு, பின்னர் தொடர் விசாரணையில் முன்பே அஞ்சலி காரில் சிக்கிய விவரம் தெரியும் என முரணான வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இதுபோன்று வழக்கில் வெளிவராத பல விசயங்கள் புதைந்துள்ள சூழலில், இந்த விவகாரத்தில் இன்னும் கொலை வழக்கே பதிவு செய்யப்படாத அவலமும் தெரிய வந்துள்ளது. இதனை எதிர்த்து, டெல்லி சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு எதிரே அஞ்சலியின் உறவினரான மாமா மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றி அஞ்சலியின் மாமா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, துணை காவல் ஆணையாளரிடம் எங்களை பேச வைப்பேன் என காவல் நிலைய அதிகாரி கூறுகிறார். வழக்கில் 302-வது பிரிவை (கொலை வழக்கு) சேர்ப்பது என்பது தனது கையில் இல்லை.
இதுபற்றி மூத்த அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறுகிறார். குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொண்ட பின்னர், போலீசார் பார்க்க வேண்டியது இன்னும் என்ன மீதியுள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட புபேந்திரா சவுராசியா என்பவர் கூறும்போது, உண்மையில் அது விபத்து என்றால், அஞ்சாலி உயிருடன் இருப்பார். உள்நோக்கத்துடன் 13 கி.மீ. காரில் அவரை இழுத்து சென்றுள்ளனர்.
அஞ்சலி, அரசியல்வாதியின் மகளாகவோ, ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரியின் மகளாகவோ இருந்திருப்பார் என்றால், டெல்லி போலீசாரின் நடவடிக்கை இப்படியா இருக்கும்? இவ்வளவு மெல்லவா அவர்களது பணி இருக்கும்? குற்றவாளிகளுக்கு எதிரான நன்றாக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை வெளிவர வேண்டும் என நாங்கள் கோருகிறோம். சட்டத்தின் நீதிமன்றத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இது வேலைக்கு ஆகவில்லை எனில், டெல்லி காவல் ஆணையாளரை சந்திப்போம். 302-வது பிரிவு சேர்க்கப்படும் வரை எங்களது போராட்டம் நிறுத்தப்படாது என்று அவர் கூறியுள்ளார்.