வக்கீல் உடையில் வந்து நீதிமன்றத்தில் வைத்து மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்


வக்கீல் உடையில் வந்து நீதிமன்றத்தில் வைத்து மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
x
தினத்தந்தி 21 April 2023 11:42 AM GMT (Updated: 21 April 2023 11:42 AM GMT)

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ராஜேந்திர ஜா என்பவர் முன்பு பார் கவுன்சிலால் தடை செய்யப்பட்டவர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் உடையணிந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

புதுடெல்லி:

டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காயமடைந்த பெண் ராதா (40) என்று அவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலும் ஒரு கையிலும் இரண்டு தோட்டா காயங்கள் உள்ளன.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ராஜேந்திர ஜா என்பவர் முன்பு பார் கவுன்சிலால் தடை செய்யப்பட்டவர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் உடையணிந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இந்த் துப்பாக்கி சூட்டில் வக்கீல் ஒருவரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில் பெண் மீது தாக்குதல் நடத்தியவர் அந்த பெண்ணின் கணவர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சட்டத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "டெல்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மற்றவர்களின் வேலையைத் தடுத்து, எல்லாவற்றிலும் கேவலமான அரசியல் செய்வதை விடுத்து, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை கடவுளிடம் விட்டுவிட முடியாது என கூறி உள்ளார்.


Next Story