டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது
டெல்லியில் இருந்து ஒடிசாவின் புவனேஸ்வர் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பி உள்ளது.
ராஞ்சி,
புதுடெல்லியில் இருந்து ஒடிசாவின் புவனேஸ்வர் நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரெயில் நேற்று மாலை 5 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில், போஜுதி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, சந்தல்டி பகுதியில் ரெயில்வே கிராசிங்கில் கேட் போடப்பட்டது. சரியாக கதவு மூடப்படும் சமயத்தில் விரைவாக வந்த டிராக்டர் ஒன்று அதன் மீது மோதி நின்றது. அதன்பின்னர், அந்த டிராக்டரால் நகர முடியவில்லை. இதனால் ரெயில்வே கிராசிங் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
எனினும், இதனை தூரத்திலேயே கவனித்து விட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ஓட்டுனர் உடனடியாக பிரேக் அடித்து, ரெயிலை நிறுத்த முயன்று உள்ளார். ரெயில் விபத்து எதிலும் சிக்காமல் நின்றுள்ளது. இதனால், 45 நிமிடங்கள் வரை ரெயில் மீண்டும் புறப்பட்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என தென்கிழக்கு ரெயில்வேயின் ஆதிரா மண்டல உயரதிகாரி மணீஷ் குமார் கூறியுள்ளார். ஒருவேளை ரெயில் ஓட்டுனர் பிரேக் அடிக்காமல் இருந்திருந்தால், பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
சம்பவம் நடந்த பின்னர் டிராக்டர் ஓட்டுனர் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேட்மேன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சமீபத்தில் 278 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.