அரசு அதிகாரியால் கற்பழிக்கப்பட்ட மாணவி: சந்திக்க அனுமதி கோரி மகளிர் ஆணைய தலைவி போராட்டம்


அரசு அதிகாரியால் கற்பழிக்கப்பட்ட மாணவி: சந்திக்க அனுமதி கோரி மகளிர் ஆணைய தலைவி போராட்டம்
x

Image Courtacy: ANI

அரசு அதிகாரியால் கற்பழிக்கப்பட்ட மாணவியை சந்திக்க அனுமதி கோரி மகளிர் ஆணைய தலைவி ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினார்.

புதுடெல்லி,

டெல்லியில், அரசு அதிகாரியால் கற்பழிக்கப்பட்ட மாணவியை சந்திக்க அனுமதி கோரி ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்திய மகளிர் ஆணைய தலைவி, இரவில் தரையில் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் எழுந்து சென்றார்.

கற்பழிப்பு

டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் துணை இயக்குனர் பிரேமோதய் காகா, இறந்து போன தன் நண்பரின் 16 வயது மகளை தன் வீட்டில் தங்க வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். அதனை அதிகாரியின் மனைவி சீமாராணி, மாத்திரை கொடுத்து கலைத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரியையும், அதிகாரியின் மனைவியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தர்ணா போராட்டம்

பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் டெல்லி போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சுவாதி மாலிவால் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையே, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு சிறுமியின் தாயாரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை சுட்டிக்காட்டி தனக்கும் அனுமதி வேண்டும் என சுவாதி மாலிவால் கேட்டார். ஆனால் அப்போதும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதுபற்றி சுவாதி மாலிவால் கூறும்போது, "போலீசார் என்னிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள். என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. போலீசார் குண்டர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்" என்றார்.

படுத்து உறங்கினார்

தனக்கு அனுமதி வழங்கப்படாததால் அவர் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தரையில் துணியை விரித்து படுத்துக்கொண்டார். இரவில் அங்கேயே உறங்கிய அவர், நேற்று மதியத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார். இறுதிவரை அவர் மாணவியை சந்திக்கவில்லை.

இவரது தர்ணா போராட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story