டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 12 நாட்களில் 635 பேருக்கு பாதிப்பு
டெல்லியில் அக்டோபர் மாதல் தொடக்கம் முதல் 12 நாட்களில் 635 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் 12 நாட்களில் டெல்லியில் 635 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்றும், இந்த ஆண்டு இதுவரை டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,572 ஆக உயர்ந்துள்ளதாகவும் குடிமை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பதிவான 1,572 வழக்குகளில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 693 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நோய்ப் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும்.
இந்த ஆண்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது. எனினும் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை 937 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் 12 நாட்களில் 635 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது நகரத்தில் வெக்டார் மூலம் பரவும் நோயின் எண்ணிக்கையை 1,572 ஆகக் கொண்டு சென்றது என்றும் டெல்லி மாநகராட்சி தெரிவித்தது.