யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தலைநகர் டெல்லியை சூழ்ந்த வெள்ளம்
யமுனை ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவில் இருந்து மெல்ல குறைந்து வருகிறது.
டெல்லி,
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது. மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை யமுனை ஆற்றின் நீர் மட்டம் 208.66 மீட்டராக இருந்த நிலையில் அந்த அளவு தற்போது சற்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆற்றின்நீர் மட்டம் 207.62 மீட்டராக உள்ளது.
ஆற்றின் நீர்மட்டம் சற்று குறைந்தபோதும் இன்னும் அபாய அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சரிசெய்யும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.