டெல்லி பெண் கத்தியால் குத்தி கொலை
மங்களூருவில் டெல்லி பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு-
மங்களூருவில் டெல்லி பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
துணி வியாபாரி
டெல்லியை சேர்ந்தவர் நயீம் (வயது 35). துணி வியாபாரியான இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு உல்லால் அருகே கோட்டேபூர் பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு நயீம் வெளியே சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் ஹமீது, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
கொலை
அப்போது வீட்டின் கழிவறையில் நயீமின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உல்லால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நயீம் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
மேலும் நயீமின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் இருந்து வந்து கணவருடன் தங்கி இருந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நயீமை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.