தேர்தலில் சீட் மறுப்பு: உணர்ச்சிவசப்பட்டு அழுது புரண்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுது புரண்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் அது குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிட வில்லை. ஆனால் ஆளும்கட்சியான சந்திரசேகர ராவின், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகிவிட்டது.
மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று சந்திரசேகர் ராவ் அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கினார். மேலும் தான் 2 தொகுதிகளில் போட்டியிடப்போவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். மேலும், முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்த தாட்டிகொண்ட ராஜய்யாவுக்கு வரும் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. தற்போது கான்பூர் (ஸ்டேசன்) தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் கட்சி தலைவரான சந்திரசேகர் ராவ் அதற்கு அனுமதி மறுத்துள்ளார். மற்றொரு மூத்த தலைவரான கடியம் ஸ்ரீஹரியை அந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
இதனால் ராஜய்யா, அதிருப்தி அடைந்தார். இதையடுத்து நேற்று அவர் அம்பேத்கர் சிலை மையத்தை அடைந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஜெய் ராஜய்யா, ஜெய் தெலுங்கானா என்று முழக்கங்கள் எழுப்பினர். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுது புரண்டார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அடுத்தகட்டமாக அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது பற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.
சொந்த கட்சியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு ராஜய்யா மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.