கைச்செலவிற்கு ரூ.2 ஆயிரம் தர மறுத்த தந்தையை கல்லால் அடித்துக்கொன்ற கொடூர மகன்
கைச்செலவிற்கு ரூ. 2 ஆயிரம் தரும்படி 25 வயதான மகன் தன் தந்தையிடம் கேட்டுள்ளார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் திபால்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாபு சவுதிரி (வயது 50). இவரது மகன் சோகன் (வயது 25). மதுபோதைக்கு அடிமையான சோகன் தன் தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை பார்த்துவந்தார்.
இதனிடையே, கடந்த 15-ம் தேதி பாபு சவுதிரி தன் விவசாய நிலத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரோ கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த பாபு சவுதிரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மதுபோதைக்கு அடிமையான மகன் சோகனே தந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மாலை நேரத்தில் விவசாய நிலத்தில் பணிகளை முடித்த பின் சோகன் தனது தந்தையிடம் கைச்செலவிற்கு 2 ஆயிரம் ரூபாய் திரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிய பாபு மகனுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சோகன் தந்தையை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் பாபு சவுதிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்காக தந்தையை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.